tamilnadu

img

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் - உலக வங்கி அறிக்கை

நடப்பு 2019-20 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்திருந்தது. இதை தொடர்ந்து, தற்போது ஐஎம்எஃப் உடனான ஆண்டுக் கூட்டத்தை முன்னிட்டு, தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு 2019 - 20 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. 

மேலும், இந்தியாவின் உள்நாட்டுத் தேவை குறைந்துள்ளதாகவும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் 7.3 சதவீதம் இருந்த தனியார் நுகர்வு, தற்போது 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல், உற்பத்தி துறையின் வளர்ச்சியும் 2-வது காலாண்டில் ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைந்து 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையை எட்டியுள்ளதாக உலக வங்கி அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அகியவை பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளதாக ஏற்கனவே பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வரும் நிலையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை உலக வங்கியும் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.